பல் மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மும்பையில் பல் மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மும்பை,
மும்பை நாயர் பல் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் பாக்யலட்சுமி (வயது 21). இவரது சொந்த ஊர் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள இச்சல்கரன்ஜி ஆகும். மாணவி காலாசவுக்கியில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார். சம்பவத்தன்று பாக்யலட்சுமி கல்லூரிக்கு செல்லவில்லை. இந்தநிலையில் கல்லூரிக்கு சென்ற பாக்யலட்சுமியின் அறை தோழி அவருக்கு போன் செய்தார். ஆனால் பாக்யலட்சுமி போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த தோழி பக்கத்து அறையில் இருக்கும் மாணவிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து பக்கத்து அறை மாணவிகள் பலமுறை தட்டிப்பார்த்தும் பாக்யலட்சுமி அறை கதவை திறக்கவில்லை. எனவே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தூக்குப்போட்டு தற்கொலை
போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறைக்குள் மாணவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் மாணவியை உடனடியாக மீட்டு கே.இ.எம். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து காலாசவுக்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், மாணவி பாக்யலட்சுமி தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தோழி ஒருவருக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், பல் மருத்துவ படிப்பிற்கான பாடம் கடினமாக இருப்பதாகவும், குறிப்பாக செய்முறை பயிற்சி செய்ய தெரியாததால் தற்கொலை செய்துகொள்ள உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.