‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி தி.மு.க. தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்ககோரி தி.மு.க. தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-09-13 23:00 GMT
கரூர்,

மத்திய அரசின் ‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்காததால் அரியலூர் மாவட்டம் செந்துறை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்தும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டும் கடந்த 8-ந் தேதி திருச்சியில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரியும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டும் 13-ந் தேதி(நேற்று) தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி கரூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு தி.மு.க. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்து பேசினார்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் ராமர் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளர் பேங்க் சுப்ரமணியன், மாவட்ட தலைவர் சின்னசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், சமத்துவ மக்கள் கழகம், எம்.ஜி.ஆர். கழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், தி.மு.க.வின் தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அனிதா உருவப்பட பதாகையை கையில் ஏந்தியபடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்