கடன் வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த 2 பேர் கைது

கடன் வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-14 02:00 GMT

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் புதிய சாஸ்திரி நகர் 4–வது தெருவில் சின்ன கொடுங்கையூரை சேர்ந்த சைலேஷ் (வயது 42) நிதி நிறுவனத்தை 2 வருடங்களாக நடத்தி வந்தார். தனியார் தொலைக்காட்சிகளில் தனிநபர் கடன், வீட்டுக்கடன் கொடுப்பதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் செய்தார்.

இதை நம்பி மாதவரம், கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பலர் அந்த நிதி நிறுவனத்தை அணுகி கடன் கேட்டனர். அதற்கு அந்த நிறுவனத்தினர் ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.13 ஆயிரம் முன்பணம் கொடுக்க வேண்டும் என கூறினர்.

அதன்படி 70–க்கும் மேற்பட்டோர் கடன் தொகைக்கு ஏற்றவாறு சுமார் ரூ.1 கோடி வரை முன்பணம் செலுத்தினர். எனினும் அவர்களுக்கு கடன் தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு அந்த நிதி நிறுவனம் மூடப்பட்டு இருந்ததை கண்டு பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் மாதவரம் போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் மாதவரம் போலீஸ் துணை கமி‌ஷனர் கலைச்செல்வன், உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணியம் விசாரணை நடத்தி மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் சைலேஷ், நிறுவன பெண் ஊழியர் சுகன்யா ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும் மேலாளர் ஜேம்ஸ், மற்றொரு பெண் ஊழியர் சர்மிளா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்