மாவட்டம் முழுவதும் கோர்ட்டு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
மாவட்டம் முழுவதும் கோர்ட்டு ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு, அதை உடனடியாக வழங்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இதனால், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கோர்ட்டு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதன்காரணமாக மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. தாலுகா கோர்ட்டுகளிலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை தற்காலிக ஊழியர்கள் செய்தனர்.
இதே போல, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோர்ட்டுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில், ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள், வக்கீல்கள் சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டு பேசினர்.
இதே போல நத்தம் கோர்ட்டு வளாகம் முன்பு எழுத்தர் சுப்பிரமணியன் தலைமையில் கோர்ட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்டம் முழுவதும் மொத்தம் கோர்ட்டுகளில் 264 பேர் பணிபுரிகிறார்கள். நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, இவர்களில் 243 பேர் பணிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.