திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் காத்திருப்பு போராட்டம் 680 பேர் கைது

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் 680 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-13 23:15 GMT

திருப்பூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். 7–வது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். அதை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் கடந்த 7–ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டம் நடத்துவதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இருப்பினும் கோர்ட்டு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுகாலை ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதற்கு ஜாக்டோ–ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரும், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான பார்த்தீபன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டது. நாற்காலிகள் கொண்டு வந்து போடப்பட்டு ஊழியர்கள் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். மதியம் அங்கேயே சமையல் செய்ய ஏற்பாடு செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஊழியர்கள் சமையல் பணிகளை கவனித்தனர். பின்னர் அந்த வளாகத்தில் அமர்ந்தவாறே அனைவரும் மதிய உணவு சாப்பிட்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் மாலை 4½ மணி அளவில் திருப்பூர் தெற்கு போலீசார் சென்று காத்திருப்பு போராட்டம் நடத்தியவர்களை திடீரென்று கைது செய்து அருகில் உள்ள ஒரு மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர். மொத்தம் 680 பேர் கைது செய்யப்பட்டனர். இரவு 8 மணி வரை அவர்கள் மண்டபத்திலேயே தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்