நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி ஊட்டியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2017-09-13 23:00 GMT

ஊட்டி,

மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் ஊட்டி ஐந்து லாந்தர்திடலில் நேற்று நடைபெற்றது.

இதற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாநில பொருளாளர் பிறைநுதல்செல்வி, தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. முன்னதாக நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

இது குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் கூறியதாவது:–

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டிக்கிறோம். நீட் தேர்வால் தமிழகத்தில் ஏராளமான மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்க வில்லை. இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, நீட் தேர்வு முறையை தமிழகத்தில் உடனே ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ., திராவிடமணி எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அனிபா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பத்ரி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பெள்ளி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சமது, ஜனதாதள மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்