திருவண்ணாமலையில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்

திருவண்ணாமலையில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் 1, 267 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-13 12:15 GMT
திருவண்ணாமலை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 7-ந் தேதி முதல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் மதுரை ஐகோர்ட்டு அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இருப்பினும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோஷமிட்டவாறு பெரியார் சிலை வரை ஊர்வலமாக வந்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 615 பெண்கள் உள்பட 1, 267 பேரை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்