கடலூரில், கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்

Update: 2017-09-13 11:00 GMT
கடலூர்,

‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்திலும் மாணவ-மாணவிகள் போராட்டம் நீடித்து வருகிறது.

அந்த வகையில் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், உதயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல் கடலூர் செம்மண்டலம் அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து புதிய கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். ஆனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போராட்டம் நடைபெறவில்லை.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முன்பும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் செய்திகள்