புனே அருகே சோகம் மகள், மகனை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை

புனே அருகே மகளையும், மகனையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2017-09-12 22:22 GMT
புனே,

புனே அருகே மகளையும், மகனையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விதவை பெண்

புனே மாவட்டம் ஜூன்னார் தாலுகா மஞ்சர்வாடி கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண் ரேஷ்மா. இவரது கணவர் 6 மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், ரேஷ்மா தனது மகள் சுருஸ்தி (வயது 9), மகன் சுவராஜ் (6) ஆகியோருடன் மிகவும் கஷ்டப்பட்டார். குடும்பத்தில் வறுமை வாட்டியது.

இதனால், விரக்தி அடைந்த ரேஷ்மா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். எனினும், தன்னுடைய இறப்புக்கு பின்னர் பிள்ளைகள் இருவரும் ஆதரவு இன்றி நிர்க்கதி ஆகிவிடுவார்களே என்று கருதிய அவர், அவர்களையும் கொலை செய்ய தீர்மானித்தார்.

கொலை- தற்கொலை

அதன்படி, சம்பவத்தன்று மனதை கல்லாக்கி கொண்டு பிள்ளைகள் 2 பேரையும் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்தார். பின்னர், தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், 3 பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் இறந்த துக்கம் மற்றும் குடும்ப வறுமையால் பிள்ளைகளுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்