கட்டுமான அதிபர் கொலை வழக்கில் ரியாஸ் சித்திக்கிற்கு ஆயுள் தண்டனை தடா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

கட்டுமான அதிபர் கொலை வழக்கில் ரியாஸ் சித்திக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை தடா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

Update: 2017-09-12 23:00 GMT

மும்பை,

கட்டுமான அதிபர் கொலை வழக்கில் ரியாஸ் சித்திக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை தடா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

கட்டுமான அதிபர் கொலை

மும்பை ஜூகுவை சேர்ந்த கட்டுமான அதிபர் பிரதீப் ஜெயின் கடந்த 1995–ம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர் தனது சொத்தில் ஒரு பகுதியை நிழல் உலக தாதா அபு சலீமுக்கு தராததால் தீர்த்து கட்டப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தாதா அபுசலீம், அவரது டிரைவர் மேஹந்தி ஹசன், மற்றொரு கட்டுமான அதிபர் விரேந்திர ஜாம்ப், ரியாஸ் சித்திக்கி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் அபுசலீம் உள்பட மற்ற 3 பேரும் குற்றவாளிகள் என கடந்த 2015–ம் ஆண்டே கோர்ட்டால் அறிவிக்கப்பட்டது. இவர்களில் அபுசலீமுக்கும், மெஹந்தி ஹசனுக்கும் மும்பை தடா கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கில் ரியாஸ் சித்திக்கி அப்ரூவராக மாறினார். ரியாஸ் சித்திக்கி மீதான விசாரணை தடா கோர்ட்டில் நடந்து வந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த 1–ந் தேதி தடா கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அப்போது ரியாஸ் சித்திக்கியை நீதிபதி குற்றவாளி என அறிவித்தார்.

இந்த வழக்கில் அவருக்கான தண்டனையை அறிவிப்பதற்காக நேற்று தடா கோர்ட்டு கூடியது. அப்போது ரியாஸ் சித்திக்கிற்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

ரியாஸ் சித்திக்கி மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளியும் ஆவார். கடந்த வாரம் இந்த வழக்கில் தண்டனையை அறிவித்த தடா கோர்ட்டு ரியாஸ் சித்திற்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து இருந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்