சேலத்தில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-12 23:00 GMT
சேலம்,

சேலம் கிச்சிப்பாளையம் அப்பர் தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 28). முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூவரசன்(23). கடந்த மாதம் இவர்கள் இருவரும் நஞ்சம்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவரை பொன்னம்மாபேட்டை அருகே வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.

இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமார், பூவரசன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான உதயகுமார் மீது வீராணம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும் பதிவாகி உள்ளன.

குண்டர் சட்டத்தில் கைது

இதேபோல் பூவரசன் மீது வீராணம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளன. எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளான இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று உதயகுமார், பூவரசன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் நேற்று உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்