சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டம்: புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு
சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தை புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.
புதுச்சேரி,
தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி இணைப்பினை தொடர்ந்து அவருக்கு துணை முதல்–அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதற்கு டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் 19 எம்.எல்.ஏ.க்கள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர்.
இந்தநிலையில் அ.தி.மு.க.வை கைப்பற்ற எடிப்பாட பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று கூட்டப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், ராஜ்யசபா எம்.பி. ஒருவர் என 53 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரிமணிகண்டன், அசனா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் ராஜ்யசபா எம்.பி.யான கோகுலகிருஷ்ணனும் கலந்துகொள்ளவில்லை. அவர்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்திற்கு செல்லவில்லை.
ஆனால் மாநில செயலாளர் புருஷோத்தமன் உள்பட மாநில நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பாதி அளவுக்கு கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்களை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் அழைத்து சென்றார்.