பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைக்கும் ஆசை இல்லை ஆர்.அசோக் பேட்டி
பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைக்கும் ஆசை இல்லை என்று பா.ஜனதாவை சேர்ந்த ஆர்.அசோக் கூறினார். பா.ஜனதாவை சேர்ந்த கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் துணை முதல்–மந்திரியுமான ஆர்.அசோக் பெங்களூருவில்
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைக்கும் ஆசை இல்லை என்று பா.ஜனதாவை சேர்ந்த ஆர்.அசோக் கூறினார்.
பா.ஜனதாவை சேர்ந்த கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் துணை முதல்–மந்திரியுமான ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
ஆசை எங்களுக்கு இல்லைபெங்களூரு மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற 28–ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து 2 ஆண்டுகள் அதிகாரத்தை அனுபவித்துள்ளது. இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் ஆசை எங்களுக்கு இல்லை.
சில எம்.எல்.சி.க்கள் போலி முகவரி கொடுத்து ஓட்டுப்போட்ட விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மாநகராட்சி கமிஷனரே புகார் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தில் ஒரு சில நாட்களில் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் நாங்கள் பொறுத்திருந்து பார்க்கிறோம். போலி முகவரி கொடுத்து ஓட்டுப்போட்டதை தேர்தல் ஆணையம் கூறினால், அவர்களின் உறுப்பினர் பதவி தானாகவே ரத்தாகிவிடும்.
பெரும்பான்மையை கொடுத்தனர்அத்தகைய எம்.எல்.சி.க்கள் ஓட்டுரிமையை இழப்பார்கள். அந்த சூழ்நிலையில் பா.ஜனதா பெரும்பான்மை பலத்துடன் மேயர் மற்றும் துணை மேயர் பதவியை கைப்பற்றும். மாநகராட்சியில் பின்வாசல் வழியாக அதிகாரத்தை பிடிக்கும் ஆசை எங்களுக்கு இல்லை. தேர்தலில் மக்கள் எங்களுக்கு பெரும்பான்மையை கொடுத்தனர்.
ஆனால் காங்கிரஸ் குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றியது. அடுத்த தேர்தல் வரும்போது மக்கள் காங்கிரஸ் கட்சியை புறக்கணிப்பார்கள். கடந்த 2 ஆண்டுகளில் மாநகராட்சியில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. பெங்களூருவில் கடந்த சில நாட்களில் பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்று ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். அவர்கள் தங்களின் வீடுகளுக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது.
பணம் எங்கே போனது?கால்வாயை தூர்வார ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் சொல்கிறார். அந்த பணம் எங்கே போனது?. மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல்களால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் நாங்கள் அதிகாரத்தை பிடித்தால் மக்கள் எங்களுக்கு எதிராக கோபம் கொள்வார்கள். மேலும் கூட்டணி குறித்து ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் தேவேகவுடா, குமாரசாமி உள்ளிட்டோர் யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.