10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 550 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-12 22:45 GMT
நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு(ஜாக்டோ- ஜியோ) சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் கடந்த 7-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 64 துறைவாரியான சங்கங்களை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாகை - நாகூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் திரளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஊதிய முரண்பாடுகளை கலைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

550 பேர் கைது

சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், செந்தில்குமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 160 பெண்கள் உள்பட 550 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

மேலும் செய்திகள்