விடுதலை கிடைக்கும் வரை ஜடாமுடி, தாடியுடன் இருக்க முருகன் முடிவு அதிகாரிகள் தகவல்

ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதி முருகன் தனக்கு விடுதலை கிடைக்கும் வரை ஜடாமுடி, தாடியுடன் இருக்க முடிவு செய்துள்ளதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2017-09-12 23:00 GMT
வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதி முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வாழ்க்கை மீது விரக்தி அடைந்துள்ளார். மேலும் அவர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காரணமாக ஜடாமுடி தரித்து, காவி உடை உடுத்தி, தாடி வளர்த்து சாமியார் போல் தனது தோற்றத்தை மாற்றினார். இதையடுத்து அவர் ஆன்மிகவாதி போல் தினமும் தியானம் செய்தல், கடவுளை தொழுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும், ஜீவசமாதி எனும் கடவுளுக்கு தனது வாழ்வை அர்ப்பணிக்கும் விதமாக கடந்த மாதம் 18-ந் தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

ஜடாமுடி, தாடியை எடுக்க மறுப்பு

தொடர் உண்ணாவிரதத்தால் அவர் சோர்வடைந்தார். தனது கணவரின் மனநிலையை மாற்றி அவரை காப்பாற்ற நினைத்து பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினியும் தனது பாசப்போராட்டமாக உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து முருகன் தனது 13 நாள் உண்ணாவிரதத்தை கடந்த மாதம் 30-ந் தேதி முடித்துக் கொண்டார். எனினும் அவர் பக்தியில் மூழ்கியே காணப்படுகிறார்.

விடுதலை கிடைக்கும் வரை முருகன், தான் வளர்த்த தாடியை அகற்றப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், முருகன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டபின் சகஜ நிலைக்கு திரும்பினார். எனினும் ஆன்மிக நாட்டத்தை விடவில்லை. முருகனை தாடி மற்றும் தலை முடியை எடுத்து பழைய நிலைக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர் ‘எனக்கு விடுதலை கிடைக்கும் வரை நான் எனது தாடி, தலைமுடியை எடுக்க மாட்டேன். விடுதலை கிடைத்த பின்னரே இவற்றை எடுப்பேன் என்று கூறினார்’ என்றனர். 

மேலும் செய்திகள்