சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் மறியல் செய்ய முயற்சி

திசையன்விளை அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

Update: 2017-09-12 21:00 GMT

திசையன்விளை,

திசையன்விளை அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

குடிநீர் பிரச்சினை

திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏறந்தை கிராமத்தில் ஒரு பகுதி ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்டது. இன்னொரு பகுதி நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்டது. இதில் நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் கிராம மக்களுக்கு வெகுநாட்களாக தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

மறியல் செய்ய முயற்சி

எனவே ஆத்திரமடைந்த கிராம மக்கள் சீரான குடிநீர் வழங்கக்கோரி, திசையன்விளை– நாங்குநேரி ரோட்டில் ஏறந்தை விலக்கில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி, அங்கு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் இதுகுறித்து நாங்குநேரி யூனியன் ஆணையாளர் கருணாவதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கூறி தண்ணீர் விட ஏற்பாடு செய்யப்படும் என அவர் உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியல் செய்யாமல் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்