நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை: பவானிசாகர் அணை நீர்மட்டம் 70 அடியை நெருங்குகிறது

நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 70 அடியை நெருங்குகிறது.

Update: 2017-09-12 22:30 GMT

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. மண்ணால் கட்டப்பட்ட இந்த அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் சகதி போக 105 அடிக்கு தண்ணீரை தேக்க முடியும். பவானிசாகர் அணை மூலம் பவானி ஆறு, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்கால் மூலம் சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதுதவிர பவானி, கோபி, புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகுதிகளுக்கும், மாவட்டத்தில் உள்ள 20 பேரூராட்சி, 100–க்கும் மேற்பட்ட ஊராட்சி மக்களின் குடிநீர் தேவையையும் தீர்த்துவைக்கிறது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. ஆண்டின் தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் 27 அடிக்கு சென்றுவிட்டது. இதனால் பாசன வாய்க்கால்களில் விவசாயத்துக்காக தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டது. ஏராளமான விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கின்றன.

இந்தநிலையில் கடந்த 15 நாட்களாக நீலகிரி மலைபகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. மெல்ல மெல்ல அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. கடந்த 5 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதற்கிடையே பில்லூர் அணையில் இருந்தும் பவானிசாகர் அணைக்கு அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை 8 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரத்து 226 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் 25 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 68.51 அடியாக உள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று (புதன்கிழமை) அல்லது நாளை (வியாழக்கிழமை) அணையின் நீர்மட்டம் 70 அடியை நெருங்கிவிடும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்