காவிரி மகாபுஷ்கர விழா தொடங்கியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

மயிலாடுதுறையில் காவிரி மகாபுஷ்கரவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

Update: 2017-09-12 23:00 GMT
மயிலாடுதுறை,

இந்தியாவில் உள்ள கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்ரா, பிரம்மபுத்ரா, பரணிதா என்ற 12 புண்ணிய நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நதி என 12 ராசிகளுக்கும் 12 நதிகள் புஷ்கர நதிகளாக கூறப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் எந்த ராசியில் பிர வேசிக்கிறாரோ, அந்த ஆண்டு அந்த ராசிக்கான நதியில் புஷ்கரம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியானார். அதைத்தொடர்ந்து துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

தற்போது இந்த புஷ்கர விழா காவிரியில் 144 ஆண்டுகளுக்குப்பிறகு வருவதால் காவிரி மகாபுஷ்கர விழா என்ற பெயரில் காவிரி உற்பத்தியாகும் குடகுமலை முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரையிலும் உள்ள முக்கிய இடங்களில் கொண்டாடப் படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க காவிரி மகாபுஷ்கர விழா நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆறு துலா கட்டத்தில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாணதேசிக பரமாச்சாரியசுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சாரியசுவாமிகள் ஆகியோர் ஏற்றி வைத்தனர். முன்னதாக அங்குள்ள காவிரி தாய் சிலைக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. காலை 8.25 மணிக்கு காவிரி ஆற்றில் புஷ்கர பிரவேசம் நடைபெற்றது.

முன்னதாக மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயூரநாதர் கோவிலில் இருந்து மயூரநாதர், அபயாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள், ஐயாறப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலாகட்ட தெற்கு கரையை வந்தடைந்தனர்.

இதைப்போல தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வள்ளலார் கோவிலில் இருந்து வதாண்யேஸ்வரர், ஞானாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் மற்றும் படித்துறை காசிவிஸ்வநாதர், விசாலாட்சி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலா கட்டத்தை அடைந்தனர். இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பரிமளரெங்கநாதர் கோவிலில் இருந்து சுகந்தவனநாதர், பூதேவி, ஸ்ரீதேவியுடன் புறப்பட்டு காவிரி யானைக்கால் படித்துறையை வந்தடைந்தார். பின்னர் 8.30 மணிக்கு துலாகட்டத்தில் 4 கோவில்களின் அஸ்திர தேவர்களுக்கும், யானைக்கால் படித்துறையில் தீர்த்த பேரருக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது.

அப்போது துலாகட்டத்தின் வடக்கு கரையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரசரஸ்வதிசுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இளைய ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திரு வாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியசுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச சத்திய ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், துளாவூர் ஆதீனம் நிரம்ப அழகிய தேசிகராகிய ஞானபிரகாச தேசிக சுவாமிகள், சிறவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம், கிரீஸ் நாட்டு இள வரசி ஐரீன் ஆகியோர் புனித நீராடி சாமி வழிபாடு செய்தனர்.தொடர்ந்து துலாகட்டத்தில் திரண்டிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்களும் புனிதநீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணியளவில் ஆன்மிக ஊர்வலம் மயிலாடுதுறை கேதாரநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு பட்டமங்கலத்தெரு, மகாதானத்தெரு, வழியாக காவிரி துலா கட்டத்தை அடைந்தது. இந்த விழா வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது. 

மேலும் செய்திகள்