ஆண்டிப்பட்டியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள்–போலீசார் இடையே தள்ளு முள்ளு

ஆண்டிப்பட்டியில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Update: 2017-09-12 22:45 GMT

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராகவும், அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதிகேட்டும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்கள் கோ‌ஷமிட்டபடியே ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து சாலையோரத்தில் மாணவ, மாணவிகள் கோ‌ஷமிட்டபடி மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மாணவர்களின் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். இதனால் மாணவர்கள்–போலீசாரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் தேனி–மதுரை சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றி கைது செய்ய முயன்றனர். இதனால் மாணவர்கள், போலீசாரிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

நீண்ட நேரத்துக்கு பின்னர் மாணவர்களை, போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்