“மணல் குவாரிகளின் விதிமீறல்கள் தொடர்ந்தால் காவிரி ஆற்றை தேடும்நிலை உருவாகும்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை

மணல் குவாரிகளின் விதிமீறல்கள் தொடர்ந்தால் காவிரி ஆற்றை தேடும்நிலை உருவாகும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

Update: 2017-09-13 01:15 GMT

மதுரை,

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த சீனிவாசன், காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கத்தலைவர் சுடலைகண்ணு உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் செயல்படும் மணல் குவாரிகளில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. இந்த ஆறுகளில் கடந்த 2003–ம் ஆண்டில் இருந்து தமிழக அரசே மணல் குவாரிகளை நடத்தி வருகிறது. தஞ்சாவூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் காவிரியில் 10 இடங்களிலும், கொள்ளிடத்தில் 14 இடங்களிலும் மணல் குவாரிகள் செயல்படுகின்றன. விதிகளின்படி ஒரு மீட்டர் ஆழத்திலும், 25 எக்டேர் பரப்பளவிலும் மணல் அள்ளப்பட வேண்டும். ஆனால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 6 மீட்டர் ஆழத்திற்கும், 75 எக்டேர் பரப்பிலும் மணல் அள்ளப்படுகிறது. விதிகளை மீறி ராட்சத எந்திரங்களை பயன்படுத்தி இரவு, பகலாக மணல் அள்ளி வருகின்றனர். இதனால் காவிரியும், கொள்ளிடமும் கால்வாய்களை விட பல அடி ஆழத்துக்கு சென்றுவிட்டன.

தமிழகத்தில் 2003 முதல் 2012–ம் ஆண்டு வரை மணல் குவாரி மூலம் அரசுக்கு ரூ.1,028.40 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதே ஆண்டுகளில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.86,983 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசு மணல் விற்பனையில் நேரடியாக ஈடுபட்டால் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும். நேரடி விற்பனையில் அரசு ஈடுபடாததால் இடைத்தரகர்களின் தலையீடு அதிகரித்து மணல் விற்பனையில் கொள்ளை நடக்கிறது.

தமிழகம் முழுவதும் மணல் விற்பனையை முறைப்படுத்த மணல் குவாரிகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நீதிபதி கே.பத்மநாபன் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தராததால் குழு தலைவர் பதவியை நீதிபதி ராஜினாமா செய்தார். அதன் பிறகு புதிய குழு அமைக்கப்படவில்லை.

எனவே மாநில அளவில் மணல் குவாரிகளை கண்காணிக்க சுய அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மணல் அள்ளுவதற்கு தடை விதிப்பதுடன், தற்போது செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, “திருச்சி, கரூர், தஞ்சை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை ஆய்வு செய்ய வக்கீல்கள் அழகுமணி, சரவணன் ஆகியோரை வக்கீல் கமி‌ஷனர்களாக நியமித்து, அவர்கள் நேரடி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வக்கீல் கமி‌ஷனர்கள் தங்கள் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தனர்.

அதில், “திருச்சி, கரூர், தஞ்சை மாவட்டங்களில் செயல்படும் மணல் குவாரிகளில் கடந்த 15 ஆண்டுகளாக விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஆற்றுப்படுகைகளின் அருகில் 1 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே மணல் அள்ள வேண்டும். ஆனால் 100 அடி, 300 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்படுகிறது. மணலை எடுத்துச் செல்ல இருவழிச்சாலை வசதிகள் உள்ளன. அதிக ஆழத்தில் மணல் அள்ளப்படுவதால், அந்த குழிகளில் விழுந்து பலர் உயிரிழக்கும் நிலை உள்ளது. நீர்வள ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் நிலை உள்ளது“ என்று கூறப்பட்டிருந்தது.

பின்னர் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வக்கீல், “கடந்த 15 ஆண்டுகளாக மணல் குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளன. தமிழகத்திற்கான 70 சதவீத மணல் இந்த பகுதியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது. எனவே இந்த பகுதிகளில் மணல் எடுப்பதை முற்றிலும் தடுக்க முடியாது. இனிவரும் காலங்களில் விதிமீறல்கள் நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மணல் அதிகமுள்ள பகுதிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். அந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி வழங்கிய பின்னர், வக்கீல் கமி‌ஷனர்களும் ஆய்வு செய்து அனுமதி வழங்கலாம்“ என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “விதிமீறல்கள் தொடர்ந்தால் காவிரியையும் தேடும் நிலை உருவாகும்“ என்று தெரிவித்தனர்.

பின்னர், கரூர் மாவட்டம் மாயனூர் முதல் திருச்சி வரை காவிரி ஆற்றில் மணல் அள்ள விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன், மணல் குவாரிகளில் விதிமீறல்கள் தடுக்கப்படும் என்று தமிழக தலைமை செயலாளர் உறுதி அளிக்க வேண்டும். அதுதொடர்பாகவும், விதிமீறல்களை தடுப்பதற்கான பரிந்துரைகள் குறித்த தகவல்களையும் மனுவாக தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்ய பொதுப்பணித்துறை முதன்மை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 19–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்