வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டம்
அரியலூர் மாவட்ட மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டு, வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்ட மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் 3–வது நாளாக நேற்றும் வகுப்புகளை புறக்கணித்து வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக பள்ளி மாணவ–மாணவிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். காலை 9 மணியளவில் மாணவ–மாணவிகள் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் திடீரென வேப்பம்பட்டு ரெயில் நிலையத்துக்குள் சென்று திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற 2 புறநகர் மின்சார ரெயில்களை மறித்து அதன் முன்பு நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற மின்சார ரெயில்களும், திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து ரெயில் மறியலில் ஈடுபட்ட மாணவ–மாணவிகளை சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து காலை காலை 10 மணியளவில் ரெயில் மறியலை கைவிட்டு மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த ரெயில் மறியல் காரணமாக சென்னை–திருவள்ளூர் இடையே சுமார் ஒரு மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.