சேலம் மாவட்டத்தில் 13,680 முகாம்கள் மூலம் 5 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு ரத்தப்பரிசோதனை

சேலம் மாவட்டத்தில் இதுவரை 13,680 முகாம்கள் மூலம் 5 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் தெரிவித்தார்.

Update: 2017-09-11 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளருமான முகமது நசிமுதீன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பருவகால மாறுதலின் காரணமாக காய்ச்சல் மற்றும் டெங்கு உருவாகும் வாய்ப்பு அமைந்து உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் பணிகளில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் வீட்டின் உள்ளேயும், சுற்றுப்புறங்களையும் ‘ஏடிஸ்‘ கொசுக்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5.47 லட்சம் பேர்

அனைத்துறை அரசு அலுவலர்கள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விரைவாக காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறிதல் மற்றும் களப்பணி விவரங்கள் மூலம் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காய்ச்சல் அறிகுறி குறைவாக உள்ள மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு 281 சிறப்பு அலுவலர்கள் நோய்தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 228 மருத்துவ முகாம்கள் என இதுவரை 13 ஆயிரத்து 680 முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டன. இந்த முகாமில் 5 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. அரசு அலுவலர்கள் நோய்தடுப்பு நடவடிக்கைகளில் தங்களது முழுகவனத்தையும் செலுத்தி பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஆஸ்பத்திரி

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், பயிற்சி கலெக்டர் வைத்தியநாதன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, மாநகராட்சி ஆணையாளர் சதீஸ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி உள்ளிட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலேயே முதன் முறையாக காய்ச்சலுக்கான காரணத்தை 10 வினாடிகளில் கண்டறியும் 20 கருவிகள் சேலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி சரியாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து கன்னங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடைபெற்றது.

மேலும் செய்திகள்