வீட்டில் சிறுமிகளை அடைத்து விபசாரம்: கைதான மேலும் 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை, இன்று அணிவகுப்பு

புதுவையில் 4 சிறுமிகளை வீட்டில் அடைத்து விபசாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இன்று காலாப்பட்டு சிறையில் அணிவகுப்பு நடப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2017-09-11 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை வம்பாகீரப்பாளையத்தில் ஒரு வீட்டில் சிறுமிகளை அடைத்து வைத்து விபசாரம் நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீசார் அங்கு சென்று 4 சிறுமிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு திடீரென சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோட்டக்குப்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களான முகமது அலி, முகமது கனி, முஸ்தபா ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அப்துல் கத்தார் என்ற சேட்டு, லாஸ்பேட்டையை சேர்ந்த செல்லதுரை (29), ஆனந்த் (23) ஆகிய 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு, அங்கு அடையாள அணிவகுப்பு நடந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய சாமுவேல், ஆண்டனி, யுவராஜ், தென்னரசு, சதீஷ்ராஜ் ஆகிய மேலும் 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர்கள் தற்போது காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 5 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அனுமதி கேட்டு புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதன்படி கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று சாமுவேல் உள்பட 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலாப்பட்டு ஜெயிலில் அணிவகுப்பு நடக்க இருப்பதாக போலீசார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்