கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பண்ருட்டி அருகே கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-09-11 23:15 GMT

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூர்காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 18). இவர் வேப்பூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், விஜயகுமார் 2–ம் ஆண்டுக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதை உடனே கட்டக்கோரி கல்லூரி நிர்வாகத்தினர் நெருக்கடி கொடுத்து வந்தனர். ஆனால் சிவக்குமார், தனது மகனுக்கான கல்வி கட்டண தொகையை அவரால் ஏற்பாடு செய்ய முடியவில்லை.

இதற்கிடையே, விஜயகுமாரை கல்லூரி நிர்வாகத்தினர் கடந்த 6–ந் தேதி முதல் கல்வி கட்டணத்தை செலுத்தாமல் கல்லூரிக்கு வரக்கூடாது என்று கூறினர். இதனால், விஜயகுமார் 6–ந் தேதி முதல் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே மனவேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் விஜயகுமார் நேற்று வீட்டின் அருகே உள்ள முந்திரி தோப்புக்கு சென்று அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவக்குமார் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், எனது மகன் சாவுக்கு கல்லூரி முதல்வர் தான் பொறுப்பு. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி கட்டணம் கிடையாது. ஆனால், எனது மகன் படிக்கும் கல்லூரியில் எங்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும், 2–ம் ஆண்டு கல்வி கட்டணம் செலுத்த அதிகளவில் நெருக்கடி கொடுத்தது. இதனால் மனவேதனை அடைந்து அவன் தற்கொலை செய்து கொண்டான்.

 இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்