விதிமுறைகளை மீறி அதிகபாரம் ஏற்றுவதா? வெளியூர் லாரிகளை சிறைபிடித்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

விதிமுறைகளை மீறி வெளியூர் லாரிகளில் அதிக பாரம் ஏற்றியதை கண்டித்து தஞ்சை குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் 4 லாரிகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மத்திய சேமிப்பு கிடங்கு முன்பு நடந்த இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-09-11 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மணிமண்டபத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் நம்பர்-1 வல்லம் சாலையில் உள்ளது மத்திய சேமிப்புக்கிடங்கு. இங்கு வெளி மாநிலங்களில் இருந்து பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வினியோகம் செய்வதற்காக சரக்கு ரெயில்களில் வரும் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்ற பொருட்களை சேமித்து வைத்து வினியோகம் செய்யப்படும்.

இங்கிருந்து தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர் போன்ற மாவட்டங்களுக்கு அரிசி, கோதுமை, அனுப்பப்படுவது வழக்கம். இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து காண்டிராக்ட் அடிப்படையில் தொழிலாளர்கள் லாரிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றிவிடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் அதிக பாரம் ஏற்றிச்செல்லக்கூடாது எனவும், குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது எனவும் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 10 டயர் கொண்ட லாரியில் 16 டன்னும், 6 டயர் கொண்ட லாரியில் 10 டன்னும், 12 டயர் கொண்ட லாரியில் 21 டன்னும் அரிசி, கோதுமை ஏற்றி வந்தனர். நேற்று வெளியூரை சேர்ந்த சில லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றியதாக கூறப்படு கிறது. அதாவது 10 டயர் கொண்ட லாரியில் 25 டன் வரை அரிசிகளை ஏற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் சேமிப்புக்கிடங்கிற்கு வந்தனர்.

இது குறித்து அவர்கள் கேட்ட போது, காண்டிராக்டர்கள் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அதிக பாரம் ஏற்றிய 5 லாரிகள் சேமிப்புக்கிடங்கில் இருந்து வெளியேறியது. மேலும் 4 லாரிகள் வெளியேற முயன்ற போது அவற்றை, குட்ஷெட் லாரி உரிமையார்கள் தடுத்து சிறைபிடித்தனர். பின்னர் இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அதிக பாரம் ஏற்றிய லாரிகளை வெளியே செல்ல விடாமல் மறித்ததோடு, சேமிப்புகிடங்கு முன்பு குட்ஷெட் லாரி உரிமையார்கள் சங்க தலைவர் ராஜகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேமிப்புக்கிடங்கு முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்