கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2017-09-11 22:45 GMT
புதுக்கோட்டை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். தொகுப்பு ஊதியம் பெறுவோருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் கால வரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேச்சுவார்தை நடந்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரு சில அமைப்புகள் போராட்டதை வாபஸ் பெற்றன. ஆனால் பெருவாரியான சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போராட்ட முறை மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-வது நாள் வேலை நிறுத்தம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9, 10-ந் தேதிகள் அரசு விடுமுறை என்பதால், இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.

இதில் அரசு ஊழியர் சங்கத்தினர், வாருவாய்த்துறை சங்கங்கள், ஆசிரியர்கள் கூட்டணி சங்கங்கள் உள்ளிட்ட பெருவாரியான சங்கங்கள் கலந்து கொண்டன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகள், அங்கன்வாடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

நேற்று காலையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தரையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நாகராஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் கருப்பையா, ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ராஜாங்கம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் உள்ள அனைத்து துறைகளுக்கும் நேற்று வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் தியாகராஜன் அறிவிப்பு பலகை வைத்திருந்தார். இதனால் நேற்று காலையில் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

மேலும் செய்திகள்