100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

விவசாய தொழிலாளர்கள் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-09-11 23:15 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகளில் உள்ள பொதுமக்கள் விவசாய கூலி வேலையை மட்டுமே நம்பி உள்ளனர். பேரூராட்சியில் வசிப்பவர்கள் என்பதால் இவர்களுக்கு 100 நாள் வேலையை வழங்க மத்திய –மாநில அரசுகள் மறுத்து வருகிறது. தற்போது வரட்சி காரணமாக இவர்கள் வறுமையில் வாடி வருகிறார்கள். எனவே பேரூராட்சியில் உள்ள விவசாய கூலி தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக விவசாய தொழிலாளர்கள் ஏராளமானோர் ஈரோடு சம்பத் நகரில் ஒன்று கூடினார்கள். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து 100 நாள் வேலை கேட்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் ஏ.லாசர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம் கோரிக்கை குறித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அங்கிருந்து புறப்பட்டு ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் 1,000–த்துக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ‘மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்குக்கு முக்கிய நிர்வாகிகள் சென்று மனு கொடுங்கள்’ என்றனர்.

அதற்கு அவர்கள், ‘நாங்கள் அனைவரும் தனித்தனியாகத்தான் மனு கொடுப்போம்’ என்றனர். அதன்பின்னர் விவசாய தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது கோரிக்கை மனுவை கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் தனித்தனியாக கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்