நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: மலை ரெயில் பாதையில் மண் சரிவு
நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் குன்னூர் அருகே தரைப்பாலம் உடைந்தது. மலை ரெயில் பாதையில் மண்சரிந்து விழுந்தது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மசினகுடி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, காமராஜ் சாகர், பைக்காரா, குந்தா ஆகிய அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை தூறிக்கொண்டே இருந்தது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்ய தொடங்கியது.
மலை பகுதிகளில் இருந்து காட்டாற்று வெள்ளம் போல் மழைநீர் ஓடியது. மழை பெய்ததால் தண்ணீர் வழிந்தோடுவதற்கு ஏதுவாக மேட்டுப்பாளையம்–ஊட்டி சாலையோரம் மழைநீர்வடிகால் வெட்டப்பட்டு உள்ளது. ஆனால் நேற்று மழை கொட்டியதால் ரோட்டோரம் வெட்டப்பட்ட மழைநீர் வடிகாலை தாண்டி மழைநீர் சாலையில் ஓடியது.
மேலும் மலை பாதையில் ஆங்காங்கே திடீர் அருவி போன்று காட்டாற்று வெள்ளம் ஓடியது. இதனால் அந்த நேரத்தில் ஊட்டிக்கு வந்த வாகன ஓட்டிகளும், மலை பாதையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள். எந்த நேரமும் மண் சரிவு ஏற்படலாம் என்ற ஐயம் எழுந்ததால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு ரோந்து சென்ற போலீசார் அறிவுறுத்தினார்கள்.
சாலையோரம் இருந்த மழைநீர் வடிகால் மரப்பாலம் அருகே சாலையை கடந்து மலை பள்ளத்தாக்கில் விழுகிறது. ஆனால் காட்டாற்று வெள்ளம் போல் மழைநீர் வந்ததால் குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் அருகே உள்ள தரைப்பாலம் உடைந்தது. சிறிது நேரத்தில் சாலையில் மண்அரிப்பு ஏற்பட்டது. பின்னர் காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் ரோந்து வந்த போலீசார் ஊட்டிக்கு சென்ற வாகனங்களை கோத்தகிரி வழியாக திருப்பி விட்டனர். அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாமல் இருக்க மேட்டுப்பாளையத்திலும், குன்னூரிலும் போக்குவரத்துக்கு தடை விதித்து சாலையின் நடுவில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன.
தரைப்பாலம் சேதமானது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் குழந்தைசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அவர் நெடுஞ்சாலை துறை பணியாளர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்ததால் சீரமைப்பு பணி மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டது. பின்னர் காட்டாற்று வெள்ளம் வடிவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மழை நின்ற பிறகு சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. லாரிகளில் ஜல்லிக்கற்களும், மண்ணும் கொண்டு வந்து தரைப்பாலம் துண்டிக்கப்பட்ட இடத்தில் கொட்டப்பட்டது. அந்த இடத்தில் மேலும் அரிப்பு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகளும் அடுக்கப்பட்டன. நேற்று காலை 6 மணி முதல் மதியம் 1.45 மணி வரை சாலை சீரமைப்பு பணிகள் நடந்தன.
அதன்பிறகே மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு போக்குவரத்து தொடங்கியது. புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்ல வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே குன்னூர்–மேட்டுப்பாளையம் இடையே பல இடங்களில் மலை பாதையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய திடீர் அருவிகளை உள்ளூர் மக்கள் வியப்புடன் பார்த்தனர். லாஸ்பால்ஸ் பகுதியிலும் காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் ஓடியது. நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய பலத்த மழை பெய்த காரணத்தால் நேற்று மட்டும் குன்னூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அளித்து உத்தரவிட்டு இருந்தார். நேற்று காலையில் தான் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்ததால் பள்ளிக்கூடங்களுக்கு வந்திருந்த மாணவ–மாணவிகள் பின்னர் மழையில் நனைந்தபடியே தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
குன்னூர் பகுதியில் பலத்த மழை பெய்த காரணத்தால் வெலிங்டன்–அருவங்காடு ரெயில் நிலையங்களுக்கு இடையே மலை ரெயில் பாதையில் மண்சரிந்து விழுந்தது. இதனால் மலை ரெயில் பாதையே தெரியாத நிலை காணப்பட்டது. ரெயில் பாதையில் மண் சரிந்து விழுந்ததால் நேற்று காலை 7.45 மணிக்கு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் பயணிகள் மலை ரெயில் குன்னூர் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ரெயில்வே பணியாளர்கள் தண்டவாளத்தில் கிடந்த மண்ணை மண்வெட்டி கொண்டு அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அகற்றிய பிறகு அந்த வழியாக காலை 11 மணிக்கு பயணிகள் மலை ரெயில் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.