ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

தடை உத்தரவை மீறி போராட்டத்தை தொடர்ந்து வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Update: 2017-09-11 23:30 GMT

மதுரை,

மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழ்நாடு ஆசிரியர்–அரசு ஊழியர்கள் சங்கங்கள் (ஜாக்டோ, ஜியோ) தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசுப்பள்ளிகளில் 10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் விசாரித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்களது போராட்டத்தை தொடரக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 14–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்தநிலையில், கோர்ட்டு உத்தரவை மீறி ஏராளமான அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர்.

போராட்டம் தொடர்ந்து வருவது குறித்து நேற்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரின் கவனத்துக்கு மனுதாரர் தரப்பினர் கொண்டு சென்றனர். போராடும் அரசு ஊழியர்கள் மீது அவமதிப்பு வழக்கை கோர்ட்டு தானாக முன்வந்து (சூமோட்டோ) பதிவு செய்யவும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அரசு ஊழியர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு அனுமதி வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடரக்கூடாது என்று கடந்த 7–ந்தேதி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும் ஏராளமானவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது கோர்ட்டு உத்தரவை அவமதிப்பதாகும். இந்தநிலையில் போராட்டத்தை தொடர்ந்து வரும் 74,675 ஊழியர்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடக்கூடாது, தொடரக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது தெரிந்து இருந்தும், அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

எனவே தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தலைவர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தலைவர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்