ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க நியாய விலைக்கடைகளில் ஏற்பாடு கலெக்டர் தகவல்
நியாய விலைக்கடைகள் வாயிலாக ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்தள்ளார்.
சிவகங்கை
கலெக்டர் லதா விடுத்தள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் முதற்கட்டமாக சிவகங்கை உள்பட 14 மாவட்டங்களில் ரேஷன் கார்டுகள் மாற்றப்பட்டு ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அவ்வாறு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தங்களை கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் செயல்படும் பொது இ–சேவை மையங்களில் பதிவு செய்து திருத்தங்கள் செய்து கொள்ளலாம். உறுப்பினர் சேர்க்கை எனில் பெயர் சேர்க்கப்பட வேண்டிய நபர் 5 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் ஆதார் கார்டையும், 5 வயதிற்கு குறைவான நபர்களது பெயர்களை பிறப்பு சான்றிதழ் மூலம் சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளில் விற்பனை முனைய எந்திரத்தின் வாயிலாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முகவரி மாற்றம் எனில் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசீது, வாடகை ஒப்பந்தம், மின் கட்டண ரசீது, தொலைபேசி ரசீது, வங்கி கணக்கு புத்தக நகல், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒன்றினை பதிவேற்றம் செய்ய வேண்டும். குடும்ப தலைவர் மாற்றம் எனில் ஆதார் கார்டு, இறப்பு சான்றிதழ், விவாகரத்து சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் பதிவு செய்து மாற்றம் செய்யலாம்.
புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சான்றிதழில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும். மேலும் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கலெக்டர் அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண் 1077–ஐ காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.