பெங்களூரு சிறையில் சசிகலாவை ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்திக்கிறார்கள்
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இன்று சசிகலாவை அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திக்கிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இன்று (திங்கட்கிழமை) சசிகலாவை அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திக்கிறார்கள். பொதுக்குழு குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலாவை அந்த அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அவ்வப்போது நேரில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.இந்த நிலையில் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி– ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. அதில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குஷால் நகரில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவை அவரது ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் இன்று (திங்கட்கிழமை) சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி– ஓ.பன்னீர்செல்வம் அணி நாளை நடத்தும் பொதுக்குழு கூட்டம் குறித்து அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்துவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.