மாணவர்கள் பிற ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுரை

மாணவர்கள் பாடங்களை படிப்பதோடு பிற ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுரை கூறினார்.

Update: 2017-09-11 00:00 GMT
காரைக்கால்,

காரைக்காலை சேர்ந்த அம்பகரத்தூரில் உள்ள கிரசண்ட் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசும்போது ஆசிரியர் பணி என்பது அனைவராலும் போற்றுதலுக்கு உரிய பணி. நல்லதொரு மாணவர் சமுதாயம் உருவாகவும், இந்த சமுதாயத்தினரின் எதிர்காலம் சிறப்படைவதிலும் ஆசிரியர்களுக்கு பங்கு உள்ளது. மாணவர்கள் பாடங்களை படிப்பதோடு பிற ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதற்கேற்ற வகையில் ஆசிரியர்கள் தங்களது செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின்போது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கழக தலைவர் ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ஏ.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் கே.ஏ.யு.அசனா, கீதாஆனந்தன், சந்திரபிரியங்கா, காரைக்கால் நகராட்சி ஆணையர் டி. சுதாகர், கும்பகோணம் அன்னை கல்விக் குழும இயக்குனர் பேராசிரியர் எம்.நஜிமுதீன், காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி முதல்வர் குணசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் பேராசிரியை முஹம்மது மும்தாஜ்பேகம் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்