கடந்த காலங்களில் பார்வையிட்ட பகுதிகளில் மீண்டும் ஆய்வு கவர்னர் கிரண்பெடி முடிவு

கடந்த காலங்களில் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்த பகுதிகளை மீண்டும் ஆய்வு செய்ய கவர்னர் கிரண்பெடி முடிவு செய்துள்ளார்.

Update: 2017-09-10 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி வாரஇறுதி விடுமுறை நாட்களில் புதுவையில் சைக்கிளில் சென்று துப்புரவு மற்றும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அவர் நேற்று கனகனேரியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக அதிகாரிகளை கூப்பிட்டு விளக்கம் கேட்டார். அதற்கு அதிகாரிகள் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கழிவுநீர் ஏரியில் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளை அழைத்த கவர்னர், இதுதொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி கூறியதாவது:–

புதுவையில் 100 முறை சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் 18–ந்தேதி கனகனேரியை பார்வையிட்டேன். இப்போது இங்கு மீண்டும் பார்வையிடுகிறேன்.

இதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ள. ஏரியின் அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி, வீடுகளிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டு ஏரியில் கலந்துள்ளது. கழிவுகளை ஏரியில் கலக்க விடக்கூடாது. கழிவுநீரை சுத்திகரித்துதான் அனுப்பவேண்டும். அதற்கான சுத்திகரிப்பு மையத்தை விரைவாக செயல்பட வைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேநேரத்தில் ஏரியை சுற்றிலும் வனத்துறை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் சார்பில் மரங்கள் நடப்பட்டுள்ளன. இது தேவையானது. இந்த ஏரி சுற்று தலமாக்கப்படும். கடந்த காலங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தவற்றை மீண்டும் பார்வையிட உள்ளேன். குறிப்பாக ரெயில்நிலையம், பஸ்நிலையம், ஏரி, குளங்களில் எனது ஆய்வு தொடரும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

இந்த ஆய்வின்போது புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரகுநாதன், சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்