233 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறுவார்: டி.டி.வி.தினகரன் கிண்டல்

எடப்பாடி பழனிசாமி 233 எம்.எல்.ஏ.க்களும் தம்மை ஆதரிப்பதாக கூறுவார் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2017-09-10 23:30 GMT

மதுரை,

நெல்லை மாவட்டம் தென்காசியில் நடைபெறும் திருமணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டி.டி.வி.தினகரன் சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, ‘‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். இதனை வலியுறுத்தும் விதமாக வருகிற 16–ந் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்‘‘ என்றார். இதைத்தொடர்ந்து நிருபர்கள், அவரிடம் எடப்பாடி பழனிசாமி தனக்கு 134 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறுகிறாரே என்று கேட்டனர். அதற்கு தினகரன், ‘‘134 அல்ல, 233 எம்.எல்.ஏ.க்களும் தன்னை ஆதரிப்பதாக அவர் கூறுவார் என்று கிண்டலாக பதிலளித்தார்.

பின்னர் மதுரையில் இருந்து காரில் தென்காசி சென்றார். அப்போது டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, உசிலம்பட்டி, ஆகிய ஒன்றிய அ.தி.மு.க.வினர், டி.கல்லுப்பட்டியில் டி.டி.வி.தினகரனுக்கு பட்டாசுவெடித்து, மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும், மலர்தூவியும், வரவேற்பு கொடுத்தனர். திருமங்கலம்–தென்காசி தேசியநெடுஞ்சாலையில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து திறந்தவெளி காரில் நின்றுகொண்டு பொதுமக்களை வணங்கியபடியும், கைகளை அசைத்தும் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தார்.

அந்தப் பகுதியில் ஒருமணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரையூர்துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ், இன்ஸ்பெக்டர்கள் குருவெங்கட்ராஜ், மலர்விழி, மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்