அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மக்களை வஞ்சிக்கிறது விஜயகாந்த் குற்றச்சாட்டு
அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மக்களை வஞ்சிக்கின்றன என்று விஜயகாந்த் கூறினார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் தே.மு.தி.க. நிர்வாகி இல்ல திருமணத்தை கட்சி நிறுவன தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டு நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி பேசுகையில் விஜயகாந்த் கூறியதாவது:–
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுமே தமிழக மக்களை வஞ்சிக்கிறது. அவர்கள் தேர்தல் நேரத்தில் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏமாந்து விடாதீர்கள். தமிழகத்தில் விரைவில் மாற்றம் வரும். அந்த மாற்றம் தே.மு.தி.க.ஆட்சி அமைவதாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசியதாவது:–
அ.தி.மு.க., தி.மு.க. என்ற ஊழல் கட்சிகளுக்கு மாற்றாக உண்மைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக தே.மு.தி.க. உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள். ஆகவேதான் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும் சக்தியாக தே.மு.தி.க. உள்ளது. போயஸ் தோட்டத்தை விடமாட்டேன் என்று தீபாவும், ஆட்சியை தரமாட்டேன் என்று எடப்பாடியும் உள்ளனர். மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. ஆகவே தமிழக வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. அதை எதிர்க்கட்சியும் கண்டுகொள்ளவில்லை. மக்களுக்கான ஆட்சி, மக்கள் ஆட்சியாக தே.மு.தி.க.வால் உருவாகும். நாளை புதிய வரலாறு படைக்கும்.
இவ்வாறு பேசினார்.