குளத்து நீரை திறந்து விடுவதில் இருதரப்பினரிடையே தகராறு: கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

அவினாசியில் குளத்து நீரை திறந்து விடுவதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஒரு தரப்பினர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-10 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஒருசில நாட்களாக மழை பெய்து வந்தது. அவினாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையால் கருவலூர் பகுதியில் குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பியது. அந்த பகுதியில் உள்ள தாமரைக்குளம் நிரம்பியதை அடுத்து, மழைநீர் சீனிவாசாபுரம், அசநல்லிபாளையம் உள்ளிட்ட ஊர்களுக்குள் புகுந்தது. இதைத்தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து அங்குள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். குளத்தின் கரைகள் பலம் இழந்து உடைய வாய்ப்பு இருப்பதால், கரையை உடைத்து தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் சப்–கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆலோசனை நடத்தினார்கள்.

ஆனால் குளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற அந்த பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. அதே சமயம், குளம் நிரம்பியதால் தங்கள் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்து அழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் குளத்தின் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் கூறினார்கள். இதனால் இருதரப்பினரும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குளத்தின் தண்ணீரை திறந்து விடுவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறி அசநல்லிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒருபிரிவினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். ஆனால் நேற்று விடுமுறை நாள் என்பதால் குமார் நகரில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். பின்பு அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். குளத்தின் உபரிநீரை உடனடியாக வெளியேற்றக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சப்–கலெக்டர் ஷ்ரவன்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், சப்–கலெக்டர் அவினாசி தாமரைக்குளத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் கோரிக்கையின்படி குளத்தில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் வெள்ளநீர் செல்வதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பாதை உருவாக்கப்பட்டது. இதிலும் உடன்பாடு எட்டப்படாததால் இன்று (திங்கட்கிழமை) கலெக்டரை சந்தித்து முறையிடப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்