பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6,400 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
ஆனைமலை,
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் மிக முக்கிய அணையாக ஆழியாறு அணை உள்ளது. 3.25 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு மற்றும் கேரள மாநில பகுதிகள் நீர்ப்பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் கேரள மாநிலத்துக்கு தண்ணீர் வழங்கும் அதே நேரத்தில் பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்க பி.ஏ.பி. திட்டத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பருவ மழை கைகொடுக்காததால் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்ததால் இந்த ஆண்டும் மே மாதம் 15–ந் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது வால்பாறை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆழியாறு அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. 120 கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 80 அடியாக உள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு சம்பா சாகுபடிக்கு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. நேற்று காலை 11.30 மணிக்கு ஆழியாறு அணையில் இருந்து சிறப்பு பூஜை செய்து மலர் தூவி வரவேற்று தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கஸ்தூரிவாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்பொறியாளர் கிருஷ்ணன் வரவேற்றார். விவசாயிகளின் பாசன பயன்பாட்டிற்கான தண்ணீரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயிளுக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தற்போது ஒரு போக விவசாயத்துக்காக பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் தமிழக முதல்– அமைச்சர் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டின் ஒரு போக பாசனத்திற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 8–ந் தேதி வரை 120 நாட்களுக்கு மொத்தம் 800 மில்லியன் கன அடிக்கு மிகாமல் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
ஆழியாறு, கோட்டூர், ஆணைமலை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட விவசாயிகளின் விவசாய பயன்பாட்டிற்கு ஏதுவாக இந்த தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த தண்ணீர் மூலம் 6 ஆயிரத்து 400 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும்.
மேலும் நீராபானம் விற்பனை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து நீராபானம் விற்பனையாது நடைமுறையில் உள்ளது. விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்குவதற்காக அனைத்து ஏரி, குளங்களிலும் தூர்வாரும் பணி கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் முலம் நல்ல சத்துடன் கூடிய வண்டல் மண் விவசாயிகளுக்கு கிடைப்பதுடன் மட்டுமல்லாமல் அனைத்து குளங்களும் தூர் வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அன்னூர், அத்திக்கடவு அவினாசி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அதனை மறுசுழற்சி முறையில் விவசாயத்திற்கு பயன்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் நரேந்திரன், கருணாகரன், ஆழியாறு பழைய ஆயக்கட்டின் பாசன சங்க செயலாளர் பட்டீஸ்வரன், ஆனைமலை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரம், நகர செயலாளர்கள் கோட்டூர் பாலு, ராஜேந்திரன் கோபால் துரை, பாசன சபை தலைவர் அசோக் சண்முக சுந்தரம், அர்பன் வங்கி தலைவர் கோட்டூர் குணசீலன், கார்த்திக் அப்புசாமி, கோபாலகிருஷ்ணன் நிலவள வங்கி தலைவர் பழனியூர் ஆறுமுகம், பொள்ளாச்சி முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், ரெட்டியாரூர் செந்தில்குமார், அப்துல் அஜிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.