போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள வெளிமாநில பேராசிரியர்கள் மூலம் மாணவ–மாணவிகளுக்கு பயிற்சி

போட்டிதேர்வுகளை எதிர்கொள்ள வெளிமாநில பேராசிரியர்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Update: 2017-09-10 00:29 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதற்காக வரலாற்று புகழ்பெற்ற வேலூர் கோட்டை மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டிருந்தது.

விழாவின் தொடக்கமாக காலை 9 மணி அளவில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை திறந்து வைத்தார்.

தொடர்ந்து மாணவ– மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சியும் நடந்தது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, நிலோபர்கபில் மற்றும் கலெக்டர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:–

மாணவ– மாணவிகளின் மன அழுத்தத்தை போக்கவும், எவ்வாறு கல்வி போதிப்பது என்பது குறித்தும் இந்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவ– மாணவிகள் போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் 412 பயிற்சி மையங்கள் இம்மாத இறுதிக்குள் ஏற்படுத்தப்பட உள்ளது.

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கொள்கை முடிவு. இந்த அரசு ஏழை, எளிய மக்களுக்கான அரசு. எனவே எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

மத்திய அரசு கொண்டு வரும் எந்த போட்டிதேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களை சேர்ந்த சிறந்த பேராசிரியர்களை கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிக்க இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். கற்றல் திறன் குறைவுடைய மாணவ–மாணவிகள் தமிழகத்தில் 10 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்காக புதிய திட்டம் தீட்டப்பட்டு அந்த திட்டத்தின் மூலம் கற்றுக்கொடுக்கப்படும்.

மாணவ– மாணவிகள் படித்ததை மறந்து விடுவதை தவிர்க்க வழிவகைகள் செய்யப்பட உள்ளன. இதற்காக முதல்கட்டமாக 3 ஆயிரம் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் வகுப்பு’ திட்டம் கொண்டு வரப்படுகிறது. 9, 10, பிளஸ்–1, பிளஸ்–2 மாணவ– மாணவிகளுக்கு சிறப்பு திட்டம் தீட்டப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கணினி மயமாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகளுக்கு சென்னை மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ் உளவியல் ஆலோசனை வழங்கினார்.

மேலும் செய்திகள்