கவுரி லங்கேசின் தாய்– உறவினர்கள் சித்தராமையாவுடன் சந்திப்பு
பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசின் தாய் மற்றும் உறவினர்கள் முதல்–மந்திரி சித்தராமையாவை நேற்று சந்தித்து பேசினர்.
பெங்களூரு,
பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசின் தாய் மற்றும் உறவினர்கள் முதல்–மந்திரி சித்தராமையாவை நேற்று சந்தித்து பேசினர். இதற்கிடையே கொலையில் முக்கிய ஆதாரம் சிக்கி இருப்பதாக போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் கவுரி லங்கேஷ் (வயது 55). பத்திரிகையாளரும், எழுத்தாளருமான இவரை கடந்த 5–ந் தேதி மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தார்கள். கொலையாளிகளை கைது செய்ய முதல்–மந்திரி சித்தராமையாவின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் கவுரி லங்கேசை கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.அதே நேரத்தில் சிறப்பு விசாரணை குழுவினர் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் தோல்வி அடைந்தால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசை வலியுறுத்துவோம் என்று கவுரி லங்கேசின் சகோதரர் இந்திரஜித் ஏற்கனவே கூறியுள்ளார். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள காவேரி இல்லத்தில் நேற்று மதியம் முதல்–மந்திரி சித்தராமையாவை கவுரி லங்கேசின் தாய் இந்திரா லங்கேஷ் திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது அவருடன் கவுரி லங்கேசின் உறவினர்களும் உடன் இருந்தார்கள்.
இந்த சந்திப்பின் போது முதல்–மந்திரி சித்தராமையாவிடம், கவுரி லங்கேசை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி இந்திரா லங்கேஷ் கோரிக்கை விடுத்தார். மேலும் விசாரணையை விரைந்து முடிக்கும்படியும், சிறப்பு விசாரணை குழுவின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், அதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை என்றும் முதல்–மந்திரி சித்தராமையாவிடம் இந்திரா லங்கேஷ் கூறினார்.அப்போது கொலையாளிகளை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் இந்திரா லங்கேசிடம் சித்தராமையா உறுதிபட தெரிவித்தார். மேலும் கவுரி லங்கேஷ் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை சித்தராமையா அவரிடம் தெரிவித்தார். பின்னர் முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:–
கவுரி லங்கேஷ் கொலை குறித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகிறார்கள். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதே அரசின் விருப்பமாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கொலையை அரசு சவாலாக எடுத்துக்கொண்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. போலீசாருக்கு சில ஆதாரங்கள் சிக்கியுள்ளன. அதனால் விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள்.கவுரி லங்கேஷ் கொலை குறித்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், என்னிடம் சில விவரங்களை கேட்டார். அவருக்கும் விசாரணை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளேன். தற்போது என்னை சந்தித்த கவுரி லங்கேசின் தாயிடம் விசாரணை பற்றிய அனைத்து தகவல்களையும் அளித்துள்ளேன். எல்லாவற்றுக்கும் மேலாக நானே முன்வந்து விசாரணை குறித்த தகவல்களை போலீஸ் மந்திரியிடம் கேட்டு பெற்று வருகிறேன்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய ஆதாரம் சிக்கி இருப்பதாக மந்திரி ராமலிங்க ரெட்டி நேற்று தெரிவித்தார். இதுபற்றி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–கவுரி லங்கேஷ் கொலை குறித்து சிறப்பு விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய ஆதாரம் சிறப்பு விசாரணை குழுவிடம் சிக்கியுள்ளது. இதனால் கொலையாளிகளை நெருங்கி விட்டதாக நினைக்கிறேன். அந்த ஆதாரம் என்ன? என்பதை பகிரங்கமாக தெரிவிக்க இயலாது. கூடிய விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் இந்த வழக்கின் விசாரணை முடிவு பெறும்.
பெங்களூருவில் சட்டம்–ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். ரவுடிகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் மந்திரியின் ஆலோசகர் கெம்பையா பங்கேற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் நல்ல விதமான ஆலோசனைகள் வழங்கினால் ஏற்றுக் கொள்வேன்.
நான் 28 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளேன். மந்திரி பதவியும் வகித்துள்ளேன். அதனால் போலீஸ் துறையை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் நல்ல விதமான ஆலோசனைகளை யார் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். சிறப்பு விசாரணை குழுவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி பி.கே.சிங் மீது சில குற்றச்சாட்டுகளை குமாரசாமி கூறியுள்ளார். அதுபோன்ற குற்றச்சாட்டுகள் பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை.மூத்த எழுத்தாளர்கள் சிலருக்கு கொலை மிரட்டல்கள் வருவதால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். அதன்படி, எழுத்தாளர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.
இவ்வாறு மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.