பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; 12 பெண்கள் உள்பட 36 பேர் காயம்

பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டதில் 12 பெண்கள் உள்பட 36 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-09-09 23:00 GMT
பெரம்பலூர்,

அரியலூரில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி லாரி ஒன்று புறப்பட்டு வந்தது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் வந்தபோது பின்னால் வந்த ஆம்னி பஸ் அந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் ஆம்னிபஸ் மோதியது.

இதில் லாரி, ஆம்னி பஸ் ஆகியவை டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தன. இதில் அந்த 2 வாகனங்களும் சேதமடைந்தன. மேலும் ஆம்னி பஸ்சுக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர்.

ஆம்னி பஸ்- லாரி விபத்தில் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து பின்னால் வேகமாக வந்த கார், 3 அரசு பஸ்கள், மற்றொரு ஆம்னி பஸ் ஆகிய வாகனங்களின் டிரைவர்கள் திடீரென பிரேக் பிடித்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் சாலையில் வழுக்கியபடி சென்ற அந்த வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதின.

இந்த விபத்தால் சிறுவாச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சாலையோர பள்ளத்தில் கிடந்த ஆம்னி பஸ்சின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இதேபோல் விபத்தில் சிக்கிய மற்ற வாகனங்களில் இருந்தவர்களையும் மீட்டனர்.

இந்த விபத்தில் 12 பெண்கள் உள்பட மொத்தம் 36 பேர் காயம் அடைந்தனர். இதில் 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்பு ஊர்தி மூலம் அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் துப்புரவு பணியாளர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு கிடந்த கண்ணாடி துண்டுகள், நொறுங்கிய வாகனங்களின் பாகங்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் அவ்வழியாக போக்குவரத்து தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிமெண்டு ஏற்றி சென்ற லாரியின் டிரைவர் குறித்த விவரம் போலீசுக்கு உடனடியாக தெரியவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்