ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் நடைபாதையை ஆக்கிரமித்த 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து இருந்த 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து கமிஷனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ‘உன்னத ஊட்டி திட்டம்’ செயல்படுத்தப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டி கமர்சியல் சாலை, மெயின் பஜார், அப்பர் பஜார், நகராட்சி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை பாதுகாக்க பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், பிளேட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை மீறி பயன்படுத்துவோருக்கு ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி, சுகாதார அதிகாரி முரளி சங்கர், சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதோ? என திடீர் சோதனை நடத்தினர். ஆனால், அங்கு 50 மைக்ரானுக்கு கீழ் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் இல்லை என்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மார்க்கெட் வளாகத்தில் குப்பைகளை சேகரிப்பதற்கு வாகனம் உள்ளே சென்று வர இயலாத நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை விட நடைபாதையையும் ஆக்கிரமித்து 11 கடைகள் வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடைகளின் உரிமையாளர்கள் 11 பேருக்கு மொத்தம் ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி கூறியதாவது:–
நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் வாகனம் மூலம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாகனம் உள்ளே வர முடியாத அளவுக்கு ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை அபராதம் விதிக்கப்பபட்டு உள்ளது. தொடர்ந்து ஆக்கிரமித்து கடைகளை வைத்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளேட்டுகள் பயன்படுத்தினால், அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.