கோவை அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடல் மீட்பு

கோவை அருகே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபரின் உடல் நேற்று மீட்கப்பட்டது.

Update: 2017-09-09 23:45 GMT

பேரூர்,

கோவையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்தபோது, கோவை பேரூர் அருகே ஆறுமுக கவுண்டனூரில் உள்ள குட்டை நிரம்பி தரைமட்ட பாலம் வழியாக வெள்ளநீர் நொய்யல் ஆற்றுக்கு சென்றது. தரைப்பாலத்தில் 4 அடி உயரத்துக்கு மேல் வெள்ளம் பாய்ந்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தின் மீது பாய்ந்த வெள்ளநீரை கடந்து செல்ல முடியாமல் நின்று விட்டனர். இந்த நிலையில், சுண்டக்காமுத்தூரை சேர்ந்த கோபிநாத்(வயது35) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் தரைப்பாலம் பகுதிக்கு வந்தார். நீண்டநேரம் காத்துநின்ற அவர் திடீரென்று மோட்டார் சைக்கிளில் தரைபாலத்தை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது வெள்ள நீர் மோட்டார் சைக்கிளுடன் அவரை இழுத்துச்சென்றது. கோபிநாத்தும் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபய குரல் எழுப்பினார். ஆனால் தண்ணீர் அதிக அளவில் சென்றதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பேரூர் போலீசார் விரைந்து வந்து இரவு முழுவதும் கோபிநாத்தை தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் தரை பாலத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத் தில் கோபிநாத்தின் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள செம்மொழிநகர் குட்டை பகுதியில் கோபிநாத்தின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று கோபிநாத்தின் உடலை மீட்டனர்.

வெள்ளத்தில் சிக்கி பலியான கோபிநாத், சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்யும் ஊழியராக வேலை செய்து வந்தார். சுண்டக்காமுத்தூர் அய்யப்பன் வீதியில் வசித்து வந்த அவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், பூங்கொடி(13) எனற மகளும், கவுதம்(9) என்ற மகனும் உள்ளனர்.

கோபிநாத்தின் உடலை பார்த்து தாய் கலாவதி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். அப்போது கலாவதி திடீரென்று மயக்கம் அடைந்தார். கோபிநாத் இறந்தது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் தற்போது வாகன போக்குவரத்து அதி கரித்து உள்ளது. மழை காலத்தில் வெள்ளம் பாய்ந்து செல்லும்போது வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. ஆனால் ஆபத்தை அறியாமல் சிலர் வெள்ளத்தில் செல்லும் போது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தரைப்பாலத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்