குமரி மாவட்டத்தில் ‘லோக் அதாலத்’ மூலம் 501 வழக்குகளுக்கு தீர்வு

குமரி மாவட்டத்தில் ‘லோக் அதாலத்’ மூலம் 501 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2017-09-09 22:45 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி சதிகுமார், மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம் ஆகியோர் தலைமையில் லோக் அதாலத் நடந்தது. சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா, முதன்மை சார்பு நீதிபதி ஜெயகுமாரி ஜெமிரத்னா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி உதயவேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம் பேசியதாவது:–

குமரி மாவட்டத்தில் ‘லோக் அதாலத்‘ குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் 33 ஆயிரத்து 232 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் மாணவ–மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாஜிஸ்திரேட்டு பாரததேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில் தவிர குழித்துறை, பத்மநாபபுரம், இரணியல், பூதப்பாண்டி கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நடந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 ஆயிரத்து 456 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் 501 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.7 கோடியே 74 லட்சத்து 91 ஆயிரத்து 93 வசூலானது.

நாகர்கோவில் கோர்ட்டில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்தவர்களுள் ஒரு தம்பதியினர் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாகவும் கூறினர்.

மேலும் செய்திகள்