திரைப்படங்கள் மூலம் இயக்குனர்கள் நல்ல கருத்துகளை பரப்ப வேண்டும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு

திரைப்படங்கள் மூலம் இயக்குனர்கள் நல்ல கருத்துகளை பரப்ப வேண்டும் என்று திரைப்பட விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2017-09-09 00:00 GMT
புதுச்சேரி,

புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்பட கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சே சார்பில் இந்திய திரைப்பட விழா அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் நடைபெற்றது. திரைப்பட விழாவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர், இறுதிச்சுற்று திரைப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதினையும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். இயக்குனர் சுதா கொங்கரா ஏற்புரையாற்றினார்.

விழாவில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., அலையன்ஸ் பிரான்சே தலைவர் லலித் வர்மா, நவதர்ஷன் திரைப்படக் கழகத்தின் செயலர் பழனி, செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் பார்த்திபன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
மக்கள் விரும்பும் படியான திரைப்படத்தை எடுப்பது சிரமமான பணியாகும். ஒரு படம் மிகவும் கருத்துடன் இருக்க வேண்டும். அதன்படி ஒரு தரமான படமாக இறுதிச்சுற்று அமைந்ததால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல்வேறு விருதுகளையும் பெற்றது.

தமிழகத்தில்தான் அதிக திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. திரைப்படத்தை ரசிக்கலாமே தவிர அதிலேயே மூழ்கிவிடக்கூடாது. திரைப்படங்கள் மூலம் இயக்குனர் கள் தரமான நல்ல கருத்துகளை பரப்ப வேண்டும். இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரை கவுரவிப்பதில் புதுவை அரசும், மக்களும் பெருமிதம்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக் குனர் உதயக்குமார் வரவேற்றார். முடிவில் உதவி இயக்குனர் குமார் நன்றி கூறினார். அதைத்தொடர்ந்து இறுதிச்சுற்று படம் திரையிடப்பட்டது.

இந்திய திரைப்பட விழாவையொட்டி புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் பொதுமக்களுக்கு இலவசமாக வருகிற 12-ந் தேதி முடிய நாள்தோறும் மாலை 6 மணிக்கு பல்வேறு மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இன்று (சனிக்கிழமை) சித்ரோகர் (பெங்காலி), நாளை (ஞாயிற்றுக்கிழமை) காடு பூக்குன்ன நேரம் (மலையாளம்), 11-ந் தேதி ஏர் லிப்ட் (இந்தி), 12-ந் தேதி யூ-டர்ன் (கன்னடம்) ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

மேலும் செய்திகள்