மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு சுகாதார ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பெங்களூருவில் நடந்த சுகாதார ஊழியர்களின் போராட்டம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது.

Update: 2017-09-08 23:17 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநில ஒருங்கிணைந்த ‘ஆஷா‘ திட்ட சுகாதார ஊழியர்கள் சங்கத்தினர் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஊதியமாக ரூ.6 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும், ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவில் சுகாதாரத்துறை மந்திரி ரமேஷ்குமார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் சமாதானமாக பேசினார்.

அப்போது நாளை மாலைக்குள்(அதாவது நேற்று) சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி ரமேஷ்குமார் கூறினார். இதனை ஏற்க ஊழியர்கள் மறுத்து விட்டார்கள். அதே நேரத்தில் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று சுகாதார ஊழியர்கள் சங்கத்தின் தலைவி நாகலட்சுமி உறுதியாக தெரிவித்தார். இதனால் சுகாதார ஊழியர்கள் தங்களது குழந்தைகளுடன் சுதந்திர பூங்காவிலேயே நேற்று முன்தினம் இரவில் படுத்து தூங்கினார்கள். குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அங்கு படுத்திருந்தார்கள்.

அப்போது நேற்று முன்தினம் இரவில் கலபுரகியை சேர்ந்த சந்திரகலா என்பவர் திடீரென்று மயக்கம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் சந்திரகலாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் சுதந்திர பூங்காவுக்கு திரும்பினார். இந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் சுகாதார ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று காலையில் 5 பெண்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. உடனடியாக அவர்கள் 5 பேரும் பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் சரியாக சாப்பிடாத காரணத்தாலும், நீண்ட தூரம் பயணம் செய்து போராட்டத்தில் கலந்துகொண்டதாலும், பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுதந்திர பூங்காவுக்கே டாக்டர்கள் குழுவினர் சென்று, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தார்கள்.

இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று மதியம் கனமழை கொட்டியது. அப்போதும் சுதந்திர பூங்காவில் கூடியிருந்த சுகாதார ஊழியர்கள், அங்கிருந்து கலைந்து செல்லாமல் கொட்டும் மழையிலும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தார்கள். மழையின் காரணமாக சுதந்திர பூங்காவில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடப்பதால், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் உட்கார கூட முடியாமல் மிகுந்த சிரமத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

நேற்று மாலையில் சுகாதார ஊழியர்கள் சங்கத்தின் தலைவி நாகலட்சுமி மற்றும் நிர்வாகிகளை மந்திரி ரமேஷ்குமார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மந்திரி ரமேஷ்குமார், மாத சம்பளமாக ரூ.3,500 வழங்கவும், வட்டி இல்லா கடனாக ரூ.2 லட்சம் கொடுக்கவும், இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கவும் அரசு தயாராக உள்ளது. மேலும் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.6 ஆயிரம் நிர்ணயம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போராட்டத்தை வாபஸ் பெறும்படி கூறினார்.

இதை சுகாதார ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர். மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சுகாதார ஊழியர்கள் அறிவித்தனர். அதன்படி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் நேற்றிரவு தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்