மைனர் பெண் பலாத்காரம் தாயின் கள்ளக்காதலன் கைது

கடூர் அருகே மைனர் பெண்ணை கடத்தி வீட்டில் சிறைவைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-08 23:03 GMT

சிக்கமகளூரு,

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா (வயது 30). இவர் கடூர் தாலுகா சன்னபோகிகெரே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்று உள்ளார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே, கோவிந்தா அடிக்கடி கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்று வந்ததால், அவருக்கு கள்ளக்காதலியின் மகளான 17 வயது மைனர் பெண் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.

காமபோதையில் இருந்த கோவிந்தா, கள்ளக்காதலியின் மகளான மைனர் பெண்ணை அனுபவிக்க திட்டமிட்டார். தனது திட்டத்தை கள்ளக்காதலியிடம் கூறினால் அவர் எதிர்ப்பு தெரிவிப்பார் என்று கருதிய கோவிந்தா தனது நண்பர்களுடன் மைனர் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ய முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று சன்னபோகிகெரே கிராமத்துக்கு தனது நண்பர்கள் 2 பேருடன் வந்த கோவிந்தா, வீட்டில் தனியாக இருந்த மைனர்பெண்ணை கடத்தி சென்றுவிட்டார்.

பின்னர் அவர், பஞ்சேகொசஹள்ளி கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் மைனர்பெண்ணை சிறை வைத்து சில நாட்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே, தனது மகளை கோவிந்தா கடத்தி சென்றிருப்பதை அறிந்தும் அவருடைய கள்ளக்காதலி போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த மைனர்பெண்ணின் பாட்டி, இதுகுறித்து பீரூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பஞ்சேகொசஹள்ளி கிராமத்தில் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த மைனர்பெண்ணை மீட்டனர். பின்னர் போலீசார் மைனர்பெண்ணை சிகிச்சைக்காக கடூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், கள்ளக்காதலியின் மகளான மைனர்பெண்ணை கோவிந்தா கடத்தி, தனது வீட்டில் சிறை வைத்து பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பீரூர் போலீசார் கோவிந்தாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், மைனர்பெண்ணை கடத்த கோவிந்தாவுக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்