காணிக்கை பணத்தில் ரூ.1 லட்சத்துக்கு செல்லாத நோட்டுகள்
லால்பாக்ராஜா விநாயகர் மண்டலில் வசூலான காணிக்கை பணத்தில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செல்லாத நோட்டுகள் இருந்தன.
மும்பை,
மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிரசித்தி பெற்ற லால்பாக்ராஜா விநாயகர் சிலையை ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை காணிக்கையாக செலுத்தினர்.இதில், நேற்றுமுன்தினம் வரை எண்ணப்பட்டதில் மண்டலுக்கு ரூ.5 கோடியே 80 லட்சம் காணிக்கையாக கிடைத்து இருந்தது.
இதில், கடந்த ஆண்டு மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளும் இருந்தன. அவற்றை தனியாக எடுத்து எண்ணி பார்த்தபோது, ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி லால்பாக் ராஜா மண்டல் நிர்வாகி பாலாசாகேப் காம்பிளே கூறுகையில், ‘மண்டலுக்கு காணிக்கையாக கிடைத்து உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு முயற்சி செய்வோம்.காணிக்கையாக 5½ கிலோ தங்கம் மற்றும் 70 கிலோ வெள்ளியும் கிடைத்து உள்ளது. அந்த பொருட்கள் நாளை (இன்று) முதல் ஏலம் விடப்படும்’ என்றார்.