நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி கடலூரில் கல்லூரி மாணவிகள் மனிதசங்கிலி போராட்டம்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி கடலூரில் தனியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-09-08 22:45 GMT

கடலூர்,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்க கோரியும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவ– மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்திலும் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் தங்கள் கல்லூரியின் முன்பு நேற்று திடீர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதற்கு இந்திய மாணவர் சங்க கிளை தலைவர், மாணவி சனோதினி தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டாவால் முகத்தில் கட்டி இருந்தனர். மேலும் நீர்தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி விளம்பர பதாகைகள் மற்றும், மாணவி அனிதாவின் உருவ படத்தையும் கையில் பிடித்தபடி நின்றனர்.

அதேபோல் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தொழிற்பயிற்சி நிலைய 2–ம் ஆண்டு மாணவர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் வாழ்த்தி பேசினார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரியும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் மத்திய–மாநில அரசுகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். சில நிமிடங்களுக்கு பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். மாணவர்களின் போராட்டம் எதிரொலியால் நேற்று 2–வது நாளாக சில தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

மேலும் செய்திகள்