‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி காட்பாடியில் ரெயில் மறியல் போராட்டம்
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி காட்பாடியில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டதாக 100–க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி,
டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம் மற்றும் இந்திய குடியரசு கட்சி சார்பில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு பொறுப்பேற்று மத்திய, மாநில அரசுகள் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் காட்பாடியில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று காலையில் காட்பாடி ரெயில் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர் டால்ட் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். காலை 11.25 மணிக்கு அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம் மற்றும் இந்திய குடியரசு கட்சியினர் காட்பாடி உழவர் சந்தை வழியாக காட்பாடி ரெயில் நிலைய வளாகத்திற்குள் நுழைந்தனர்.
அவர்கள் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்க நிறுவன தலைவர் கே.ஜி.குட்டி தீனதயாளன் தலைமையில் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷமிட்டனர். அப்போது கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதனை அவர்கள் மறித்து கோஷமிட்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்று இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும், ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்து சமூகத்திற்கும் இலவச கல்வி வழங்கவேண்டும், பஞ்சமி நிலத்தை மீட்டு தலித் மக்களிடம் வழங்கவேண்டும், ரெயில்வே கேண்டீனில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் சட்டப்படி சம்பளம் வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக நிர்வாகிகள் நந்தா, ராகேஷ், சுகுமாறன் உள்பட 100–க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் காட்பாடி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.