மதுரவாயலில் உடலில் தீப்பிடித்து மனைவி சாவு காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்

உடலில் தீப்பிடித்து மனைவி பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2017-09-08 23:00 GMT

பூந்தமல்லி,

மதுரவாயல் வெங்கடேஷ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 36). செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி இந்திராகாந்தி(33). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் வீட்டில் இந்திராகாந்தி சமையல் செய்து கொண்டு இருந்தார். திடீரென சமையல் அறையில் இருந்து அவரது அலறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த சுரேஷ், ஓடிச்சென்று பார்த்தார்.

சமையல் அறையில் உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் மனைவி இந்திராகாந்தி அங்கும் இங்குமாக ஓடுவதை கண்ட அவர், மனைவியை காப்பாற்ற அவரது உடலில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்போது அவர் மீதும் தீப்பிடித்துக்கொண்டது.

கணவன்–மனைவி இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், 2 பேரின் உடலில் எரிந்த தீயை அணைத்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இந்திராகாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த தீக்காயம் அடைந்த சுரேஷ், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், பலியான இந்திராகாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமையல் செய்யும்போது எதிர்பாராதவிதமாக இந்திராகாந்தி உடலில் தீப்பிடித்ததா? அல்லது குடும்ப தகராறு காரணமாக அவரே தனது உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்